கொரோனாவினால் இறந்தவர்களில் 45 சதவீதம் பேர் சர்க்கரை நோயாளிகள்

 கொரோனாவினால் இறந்தவர்களில் 45 சதவீதம் பேர் சர்க்கரை நோயாளிகள்-தமிழகம், ஆந்திரா அரசுகள் இணைந்து நடத்திய 

              கொரோனா பரவல் பற்றிய புதிய கோணத்தில் தமிழகம் மற்றும் ஆந்திரா அரசுகள் இணைந்து மிகப்பெரிய ஆய்வை நடத்தி அறிக்கை தயாரித்துள்ளன. இந்த ஆய்வில் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான டாக்டர் பி.சந்திரமோகன், டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், டாக்டர் கே.கோபால் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆய்வுக் கட்டுரை, அமெரிக்காவின் அறிவியல் முன்னேற்ற சங்கத்தின் (ஏ.ஏ.ஏ.எஸ்.) சார்பில் நடத்தப்படும் ‘சயின்ஸ்’ என்ற உலகம் முழுவதும் செல்லக்கூடிய இதழில் வெளியாகி இருக்கிறது. இதுபோன்ற இதழில் மிகச் சிறந்த ஆய்வுகளே வெளியிடப்படுகின்றன.

அந்த வகையில் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கட்டுரை, சயின்ஸ் இதழில் இடம் பிடித்து, தமிழகத்தை மருத்துவத்திலும் உலகறியச் செய்துள்ளது. இந்த ஆய்வுக் கட்டுரையில், கொரோனா தொற்று பற்றிய புதிய கோணம், உலகத்துக்கு காட்டப்பட்டுள்ளது.

2 மாநிலங்களிலும் 5 லட்சத்து 75 ஆயிரத்து 71 பேரிடம், அதில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 84 ஆயிரத்து 965 பேரிடம், தொற்று பரவல் முறை பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உலக அளவில் அதிகம் பேரிடம் நடத்தப்பட்ட முதல் ஆய்வு இதுதான்.

அந்த ஆய்வறிக்கையின் விவரம் வருமாறு:-

கொரோனா தொற்று மற்றும் அதனால் ஏற்படும் இறப்பு, இந்தியாவில் 40 முதல் 69 வயதுடையவர்களுக்கே அதிகம் நேர்கிறது. ஒருவரால் பலருக்கு தொற்று பரவக்கூடிய ‘சூப்பர் ஸ்பிரட்’ என்ற வகையில்தான், இங்கு அதிகமானவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

ஒரே வயதுடையவர்களால் தொற்று பரவும் அபாயம் அதிகமாக உள்ளது. அதிலும், பிறந்த குழந்தை முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தொற்று பரவும் நிலை வலுவாக இருக்கிறது.

தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் மரணமடைவோரின் எண்ணிக்கை, 5 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களில் 0.05 சதவீதமாகவும், 85 வயதுக்கு மேற்பட்டவர்களில் 16.6 சதவீதமாகவும் உள்ளது.

தமிழகம் மற்றும் ஆந்திராவில், தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்ந்த பிறகு ஏற்படும் மரணம், சராசரி 6 நாட்களுக்குப் பிறகு நேர்கிறது. இது அமெரிக்காவில் 13 நாட்களாக உள்ளது.

தொற்றுக்கு ஆளானவர்களில் 70 சதவீதம் பேர், அவர்களின் தொடர்பில் உள்ளவர்களுக்கு தொற்றை ஏற்படுத்தவில்லை. ஆனால் தொற்று உறுதி செய்யப்பட்ட 8 சதவீதம் பேர் 60 சதவீதம் தொற்றை பரப்புகின்றனர்.

இந்திய மாநிலங்களில் தமிழகம் மற்றும் ஆந்திர பிரதேசம்தான் அதிகபட்ச சுகாதார பணியாளர்களை கொண்ட, பொது சுகாதாரத்தில் அதிக செலவுகளை மேற்கொள்ளும் மாநிலங்களாக உள்ளன.

கொரோனாவினால் இறந்தவர்களில் 63 சதவீதம் பேர், குறைந்தபட்சம் வேறு ஏதாவது ஒரு நோயால் பீடிக்கப்பட்டவராக இருந்துள்ளனர். 36 சதவீதம் பேர், இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட நோய்களுக்கு ஆட்பட்டு, அதனால் கொரோனா எளிதாக அவர்களை தாக்கும் சூழ்நிலை இருந்துள்ளது.

கொரோனாவினால் இறந்தவர்களில் 45 சதவீதம் பேர் சர்க்கரை நோயாளிகள். உயர்ந்த வருவாய் கொண்ட நாடுகளை போல அல்லாமல், இந்தியாவில் கொரோனா மரணங்கள் 50 முதல் 64 வயதுக்கு இடைப்பட்டவர்களிடம்தான் அதிகம் நேரிட்டுள்ளது.

ஒருவருக்கு ஒருவர் 3 அடி இடைவெளி விடாமல் செயல்படுபவர்களும், முக கவசம் அணியாமலும் இருப்போர்தான் தொற்றுக்கு அதிகம் ஆளாகின்றனர். மூடப்பட்ட நிலையிலான போக்குவரத்தில் 6 மணிநேரத்துக்கும் மேலாக இருப்பவர்களுக்கு தொற்று ஏற்பட 79 சதவீதம் வாய்ப்பு உள்ளது.

இந்த ஆய்வுகள், கொரோனா பற்றிய புதிய தகவல்களை தந்திருப்பதோடு, அதன் தடுப்பு நடவடிக்கைகளுக்கு புதிய வழிகளையும் காட்டியுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

Cricketer Kapil Dev currently in ICU: Fortis Escorts

RBI Governor Shaktikanta Das tests positive for Covid-19

India’s health budget fourth lowest in world, accoring to Oxfam